2022-01-14

தமிழர் திருநாளில் “உமாபுலமை” பரிசில் பெறும் வர்த்தக பிரிவு மாணவி!

அறிவால் உயர்வோம் அகிலத்தை வெல்வோம் என்ற கோட்பாட்டுடன் எம் இளம் தலைமுறையை கல்வியால் உயர்த்திடும் நோக்கை இலக்காக கொண்டு செயலாற்றிவரும் “உமா மகேஸ்வரன் பவுண்டேசன்” உமாபுலமை பரிசில் திட்டத்தின் ஊடாக மாணவ, மாணவியரின் கற்றல் செயல்பாடுகளிற்கு தொடர்ச்சியாக UF கரம் கொடுத்து வருகின்றது.
 
ஏழ்மை நிலைகாரணமாக கல்வியை தொடர்வதில் பொருளாதார இடர்படும் மாணவ, மாணவியரை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்படும் உமாபுலமை திட்டத்தின் 2022ம் ஆண்டில் தமிழர் திருநாளாம் தை திருநாளில் முதல் உமா புலமை பரிசிலை செல்வி ம. சொர்னவிழி இன்றைய நாள் பெற்றுக் கொண்டார்.
இன்று வெள்ளிக்கிழமை (14.01.2022) மேற்படி மாணவிக்கான உமாபரிசில் ஊக்கத்தொகையை எமது நிறுவனத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் திரு.சிவம் அவர்களால் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக எமது இவ் திட்டத்தின் ஊடாக மாணவ, மாணவியர் தம் பட்டபடிப்பை நிறைவு செய்தும், புதிய மாணவ மாணவியர் பட்ட படிப்புகளிற்காக பல்கலைகழக நுளைவு அனுமதியையும் பெற்று மேற்படிப்பினை தொடர்ந்தும் வருகின்றனர்.
 
இவ் அரிய பணியை எமது நிறுவனம் செவ்வனவே செயற்படுத்துவதற்கு எமக்கு உந்து சக்தியாக இருந்து உதவி நல்குவோர் எமது புலம் பெயர் உறவுகள். அந்தவகையில் இவ் மாணவியின் கல்விக்கான ஊக்குவிப்பினை வழங்குவதற்கு முன் வந்தவரும் ஒர் இளம் தலைமுறை பெண் ஆகும்.
 
“தான் பெற்ற கல்வியை நலிவுற்ற இன்னும் நால்வர்” பெற்று கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கில் தாயகத்தில் கல்விக்காக வசதியற்ற மாணவியருக்கு அனுசரனை வழங்க முன்வந்தார். இரு மாணவியருக்கான அனுசரணையை வழங்க முன்வத்துள்ள போதும் அவர்களில் ஒரு மாணவிக்கே உமா புலமை பரிசில் திட்டத்தின் ஊடாக இன்று வழங்கப்பட்டது.
 
இந்த நற்பணியை கனடாவில் வசித்து வரும் செல்வி. க.தமிழினி அவர்கள் அனுசரனை வழங்கியிருந்தார். இவ் கல்விக்கான காருண்ய உதவியை எமது நிறுவனமான UF ஊடாக வழங்கிய அனுசரனையாளருக்கும் மற்றும் அவர் பெற்றோர் குடும்பத்தாருக்கும் எமது மாணவ, மாணவியர் சார்பாக வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்து கொள்கின்றோம்.