2022-04-15

முன்னைநாள் பெண் போராளிக்கான சுயதொழில் ஊக்குவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் போராளியொருவர் தமது குடும்ப சூழ்நிலையை. சுட்டிக்காட்டி தமக்கு சுய தொழில் வசதியொன்றை ஏற்படுத்தி தருமாறு உமாமகேஸ்வரன் பவுண்டேசனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, செல்வி. மயிலிப்பொடி கோமதி என்ற பெண்ணுக்கான 54,799 ரூபா பெறுமதியான தைய்யல் இயந்திரம் ஒன்று நேற்றையதினம் வழங்கப்பட்டது.
 
1980 களின் மைய்யப்பகுதியில் தன்னையொரு சமூக போராளியாக இணைத்துக் கொண்ட மேற்படி பெண், குடும்பத்தின் ஏழ்மை நிலை, பொருளாதார வசதியின்மை காரணமாக தனக்கென ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தி கொள்ள முடியாமல் இன்றும் பெற்றோருடன் வாழ்ந்து வருகின்றார். இவ்வாறு எத்தனையோ பெண்கள் மிகவும் வேதனையான துயருடன் வாழ்ந்து வருகின்றனர்.
 
திருமணமாகி கணவனை இழந்து பிள்ளைகளுடன் பெண் தலைமைத்துவ குடும்பங்களாகவும், குடும்பத்தின் வறுமை, ஏழ்மைநிலையால் திருமணம் செய்ய முடியாமல் இன்றும் தனிமையில் வாழ்தல், சமூக விடியலிற்காக உழைத்ததற்காக இன்னும் அவர்களை சமூகம் ஏற்று கொள்ள மறுக்கும் நிலை போன்ற இன்னோரென்ன நிலையை பெண்கள் எதிர்கொள்கின்றனர்.
இவ்நிலையிலேயே உமா மகேஸ்வரன் பவுண்டேசன் இயன்றவரை தன்னாலான சுயதொழில் உதவிகளை வழங்கி பெண்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி ஊக்கமளித்து வருகின்றது. இவ்வாறாக நாம் இந்த மிகப்பெரும் மனித நேய பணியை முன்னெடுத்ததற்கு பக்கதுணையாய் இருந்து ஊக்கமளித்து வருவது எமது புலம்பெயர் உறவுகள்.
 
அவர்களது இந்த பணிக்காக எம்மக்கள் என்றும் அவர்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். தாம் ஒன்று தமது குடும்பம் என்று இல்லாமல் தமது உழைப்பின் சிறு பகுதியாவது வழங்கி தாயகத்தில் இன்னல்படும் எம் மக்களின் பசியை,ஏக்கத்தை போக்கி வருகின்றனர்.
 
அவ்வகையில் முன்னை நாள் பெண் போராளியொருவருக்கான சுய தொழில் ஊக்குவிப்புக்கான உதவியை புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வசித்துவரும் அன்பர் டொக்டர் சங்கர் (சுழிபுரம்) அவர்கள் வழங்கியிருந்தார். “உதவி சிறிதெனினும் உள்ளத்தால் பெரிது” இந்த பெரிய மனது படைத்தவர்கள் சிலர் இன்னும் இருப்பதால் தான் மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
 
நாட்டில் ஏற்பட்டுள்ள மிகவும் நெருக்கடியான பொருளாதார நிலையில் மிகப்பெரும் உதவியை நல்கி அங்குடும்பத்திற்கு ஒளியை ஏற்படுத்திய திரு.டொக்டர் சங்கர் அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்துக்கும் எம் மக்களின் சார்பாகவும், எமது நிறுவனத்தின் சார்பாகவும் நன்றியையும் வாழ்த்துக்களையும் UF தெரிவித்து கொள்கின்றது.