2022-06-24

யாழ் நுண்கலை பீட மாணவிக்கான உமா புலமை பரிசில்!

யாழ்பாணம் இராமநாதன் நுண்கலை பீடத்தில் பயின்றுவரும் மாணவியான செல்வி சிந்துஜா அவர்களிற்கான உமா புலமை பரிசில் கல்வி ஊக்குவிப்பு திட்டத்திற்கான உதவி இன்று வெள்ளிக்கிழமை (24.06.2022) வவுனியாவில் அமைந்துள்ள உமா மகேஸ்வரன் பவுண்டேசன் தலைமை பணியகத்தில் வழங்கப்பட்டது.
 
UF இன் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவரும் பொருளாளருமான திரு.ரவீந்திரன் ( ரவி )அவர்களால் மாணவிக்கான கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. கலை பீடத்தில் பட்டம் பெற்று தானும் ஒர் ஆசிரியராகி பல மாணவ, மாணவியரை உருவாக்கி தமிழுக்கும், கலைக்கும் பெரும் பங்காற்ற வேண்டும் என்ற ஈடுபாட்டுடன் மேற்படி துறையை தெரிவு செய்தபோதும், அந்த துறையில் பட்ட படிப்பை தொடர்வதற்கான பொருளாதார வசதியின்மை, குடும்பநிலை என்பனவற்றை சுட்டிக்கட்டி உமாபுலமை பரிசில் கல்வி ஊக்குவிப்பு திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தார்.
 
தந்தை சமூக விடுதலைக்காக உழைத்து தன்னுயிரை தியாகம் செய்த மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த திரு. தங்கராசா (ராமைய்யா) என்ற போராளி ஆவார். அப்பாவின் கனவு தன் மகள் படித்த பட்டதாரியாகி சமூகத்திற்கு பணியாற்ற வேண்டும் என்ற அப்பாவின் கனவை நனவாக்கிட அப்பா இல்லாத போதும் அம்மாவின் துணையுடன் கல்வியை சிறந்த முறையில் தொடர்ந்து பல்கலை கழகம் வரை வந்துள்ள போதும், தொடர்ந்து கல்வியை தொடர்வதற்கு அம்மாவை தலைமையாக கொண்டுள்ள எமது குடும்பத்தின் பொருளாதார நிலை ஈடுகொடுக்க முடியவில்லை என்று தெரிவித்து UF இடம் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த உமா பவுண்டேசன் உயர்பீடம் மாணவிக்கான உமா புலமை பரிசிலுக்கு சிபார்சு செய்தது.
 
இதற்கு அமைவாக மேற்படி மாணவிக்கான கல்வி ஊக்குவிப்புக்கான அனுசரனையை புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வரும் திரு.மனோ அவர்கள் முன்வந்துள்ளார். கல்வியால் உயர்வோம் வளம்மிக்க சமூகத்தை உருவாக்கிடுவோம் என்ற சிந்தனையுடன் கல்விக்கும், பொருளாதார மேம்பாட்டின் ஊடாக இன்னலுறும் எம் உறவுகளிற்கு கை கொடுத்துவரும் எம் புலம் பெயர் உறவுகளின் உன்னத பணியை போற்றிடுவோம். அவ்வகையில் இவ் மாணவிக்கான கல்விக்கு கரம் கொடுக்க முன்வந்துள்ள திரு. மனோ அவர்களிற்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எமது வாழ்த்துக்களையும் நன்றியையும் மாணவி சார்பாகவும், UF சார்பாகவும் தெரிவித்து கொள்கின்றோம்.
 
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து”