2022-09-19

பள்ளி மாணவிக்கான துவிச்சக்கரவண்டி!

கரவெட்டி ராசகிராமத்தை சேர்ந்த மாணவியொருவர் கல்வி கற்பதற்கு போக்குவரத்து வசதி செய்து தருமாறு உமாமகேஸ்வரன் பவுண்டேசனிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக மேற்படி மாணவிக்கான துவிச்சக்கரவண்டி இன்றையதினம் திங்கள்கிழமை (19.09.2022)எமது நிறுவனத்தின் யாழ் இணைப்பாளர் திரு. சிவம் அவர்களால் வழங்கப்பட்டது.
 
வன்னியில் இடம்பெற்ற மோதலின் போது இன்னல்களை சந்தித்த குடும்பங்களில் ஒன்றான இவ் குடும்பம் மூன்று சகோதரர்களை காவு கொடுத்தும், ஒரு சகோதரர் நிலக்கண்ணியில் சிக்குண்டு காலை இழந்துள்ள நிலையில் தந்தையின் தினசரி வருமானத்தில் வாழ்க்கையை ஒட்டுகின்றனர். இந்த நிலையில் கல்வியை கற்க வேண்டும் அதன் மூலம் உயர்நிலையடைந்து குடும்பத்தையும், சமூகத்தையும் தலைநிமிர வைக்க வேண்டும் அதற்காக படித்தே ஆக வேண்டும். அந்த கல்வியை தொடர்வதற்கு குடும்பத்தின் வருமானம் போதியதாக இல்லை தினசரி 4, 5 கிலோமீற்றர் தூரம் நடைபயணம் ஊடாகவே கல்வி கற்கும் பாடசாலையை சென்றடைய வேண்டிய நிலையில் பள்ளி செல்வதற்கான போக்குவரத்து வசதியை செய்து தருமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைய மாணவிக்கான வசதி உமா மகேஸ்வரன் பவுண்டேசனால் செய்து கொடுக்கப்பட்டது.
 
மாணவியின் தேவையையும், குடும்பத்தின் பொருளாதார நிலையையும் கருத்திற்கு கொண்ட திரு. நிறஞ்சன் அவர்கள் கனடாவில் இருந்து துவிச்சக்கர வண்டிக்கான நிதி அனுசரனையை வழங்கியிருந்தார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பொருட்களின் விலை யானை விலை, குதிரை விலை என்று எகிறி நிற்கின்றது.
 
கடந்த சில வருடங்களிற்கு 18,000, 22,000 என்றிருந்த துவிச்சக்கர வண்டியொன்றின் விலை தற்போது 65,000 ரூபா என்ற உச்சத்தை தொட்டுள்ளது. இவ்வாறான விலை உயர்வு பொருளாதார நெருக்கடியிலும் எம் எதிர்கால சமூகம் கல்வியில் உயர்நிலையை தொட வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் இவ்வுதவியை திரு.நிரஞ்சன் வழங்கியிருந்தார்.
 
இது மட்டுமல்ல பல்வேறு உதவிகளை எமது(UF) நிறுவனத்தின் ஊடாகவும், தனிப்பட்ட ரீதியாகவும், நண்பர்கள், தோழர்கள் நினைவாகவும் வழங்கி வருகின்றார். அவரது கருணைமிகுந்த செயற்பாட்டிற்கும் தாராள மனதிற்கும் என்றென்றும் அவரும் அவர்தம் குடும்பமும் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று மேற்படி மாணவி, குடும்பத்தார் சார்பாகவும் எமது(UF) நிறுவனத்தின் சார்பிலும் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்து கொள்கின்றோம்.