வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது தனது கையை இழந்த நிலையில் புனர்வாழ்வு பெற்று தற்போது சமூகத்துடன் இணைந்துவாழும் முன்னைநாள் போராளிகள் குடும்பத்திற்கான சுயதொழில் ஊக்குவிப்பு உமாமகேஸ்வரன் பவுண்டேசனால் வழங்கி வைக்கப்பட்டது.
இயக்கச்சி பகுதியில் வசித்துவரும் கணவன் மனைவி இருவரும் முன்னைநாள் போராளிகள் ஆவர், இவர்களில் கணவர் தனது கையை யுத்தத்தின் போது இழந்து அங்கவீனமுற்ற நிலையில் வாழ்ந்துவருகின்றார்.
இவர்கள் சமூகத்தின் விடியலிற்காக தமது இளமை காலத்தை தியாகம் செய்து இன்று வாழ்க்கைக்காக போராட வேண்டிய நிலையில் உமாமகேஸ்வரன் பவுண்டேசனிடம் சுய தொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்கான உதவியை கோரியிருந்தனர்.
அதற்கமைய அவர்களது கோரிக்கையை பரிசீலனை செய்த எமது நிறுவனம் இன்றையதினம் ஞாயிற்றுகிழமை (21.03.2021)அவர்களிற்கான சுய தொழில் ஊக்குவிப்பினை வழங்கிவைத்தது. இயக்கச்சி பகுதியில் உள்ள அவர்களது இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட உமாமகேஸ்வரன் பவுண்டேசனின் பொருளாளர் திரு. ரவீந்திரன்(ரவி), யாழ் மாவட்ட இணைப்பாளர் திரு.சிவம் ஆகியோர் அவர்களது முயற்சிக்கு ஊக்கமளித்து ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.
உடலின் அங்கத்தை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத இந்த சமூக பற்றாளன் உழைத்து தன்னால் வாழமுடியும் இன்னும் பலருக்கு தானும் உதவிடவேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தியதுடன், தனது அயலவர்களிற்கு தான் உதவுவேன் என்ற நம்பிக்கையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இவர் வசிக்கும் வீட்டிற்கு அருகே உள்ள குடும்பம் ஒன்றும் அங்கவீனர்களாகவே உள்ளனர் அவர்களில் கணவர் பார்வையிழந்த நிலையிலும் மனைவி கால் இயலாத நிலையிலும் சிறிய மகளுடன் வசிக்கின்றனர். தனது இவ் உதவியினால் "தானும் உயர்ந்து அயலவரையும் உயர்த்திடுவேன்" என்ற நம்பிக்கையை ஊட்டியுள்ளதுடன் அதனை செய்வார் என்ற நம்பிக்கையும் அவரது குடும்பத்திடம் காணமுடிந்தது.
எமது நிறுவனம் பல்வேறு பணிகளை இன, மத,மொழி,அரசியல் வேறுபாடுகளை கடந்து “உதவி”என்ற நோக்கத்துடன் பரந்துபட்டு முன்னெடுத்து வருகின்றது. எமது இந்த பாரிய திட்டத்திற்கு மனித நேயம் மிக்க எமது உறவுகள் தொடர்ந்து கைகொடுத்து ஊக்கமளித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஒரு சமூகத்தின் விடியலிற்காக தங்களை தியாகம் செய்த குடும்பத்தின் நல்வாழ்விற்கான நிதியுதவியை சுவிற்சர்லாந்து நாட்டில் வசித்துவரும் திரு.திருமதி. பகீர் ரேகா குடும்பத்தினரும், திரு.திருமதி.ராஜன் நந்தினி குடும்பத்தினரும் வழங்கி அனுசரணை வழங்கியிருந்தனர்.
எமது UF நிறுவனம் ஊடாக முன்னெடுக்கப்படும் கல்வி, சுயதொழில் ஊக்குவிப்பு, வாழ்வாதார உதவி போன்ற இன்னோரென்ன திட்டங்களிற்கு ஊக்கமளித்து ஆதரவு நல்கிவரும் நன்கொடையாளர்களிற்கும் UFநன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வதுடன் பலனாளியும் அவரது தொழில் சிறந்து விளங்கி பிரகாசமன வாழ்வினை குடும்பத்துடன் வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றோம். எமது சமூக மேம்பாட்டிற்கான திட்டத்தில் எம்முடன் இணைந்து பயணிக்கும் திரு.திருமதி பகீர்,திரு.திருமதி.ராஜன் குடும்பத்திற்கும் ஏனைய நன்கொடையாளர்களிற்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வதில் UFபெருமிதம் கொள்கின்றது.