கற்றல்/வாழ்வாதாரத்துக்கான வாழ்வாதார ஊக்குவிப்பு!
அன்னையை இழந்த நிலையிலும் தந்தையின் போதிய வருமானமின்றிய நிலையிலும் தமது பாட்டியின் துணையுடன் மிகவும் ஏழ்மை நிலையில் கல்வியை தொடர்வதற்கே பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் பிள்ளைகள் "உமாமகேஸ்வரன் பவுண்டேசனிடம்" விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அவர்களிற்கான உதவி இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை(04.04.2021) உமாமகேஸ்வரன் பவுண்டேசனால் வழங்கப்பட்டது.
வழங்கப்படும் உதவிகள் தமது தினசரி வாழ்வாதாரத்திற்கும், கல்வி நடவடிக்கைகளிற்கும் இணைந்ததாக அமைந்தால் தமக்கு உதவியாக அமையும் என்று அந்த பிள்ளைகள் தெரிவித்ததற்கு அமைவாக கோழி வளர்ப்புக்கான உதவியை வழங்குவதற்கு எமது நிறுவனம் எண்ணியது, அதனையே அந்த பிள்ளைகளை வளர்த்துவரும் வயதுமுதிர்ந்த பாட்டியும் விரும்பியிருந்தார்.
அவர்களது கோரிக்கைக்கு அமைவாகவம் எமது நிறுவனத்தின் முடிவுக்கு அமைவாகவும் அவர்களிற்கான உதவியின் முதல் கட்டமாக இன்றையதினம் உமாமகேஸ்வரன் பவுண்டேசனின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவரான திரு.சிவம் அவர்களால் கோழி வளர்ப்புக்கான கூட்டினை அமைப்பதற்கான முதற்தொகுதி நிதியாக 35,000 ரூபா கொடுக்கப்பட்டதுடன் இரண்டாம் கட்ட நிதி வேலைகள் பூர்த்தியடைந்ததும் வழங்கப்படவுள்ளது.
அன்னையை இழந்த நிலையிலும், தந்தைக்கு போதிய வருமானமின்றி நாள்தோறும் தனியனாக உழைக்கும் ஊதியத்தில் மூன்று பிள்ளைகளையும், அவர்களிற்கான கல்வியையும் தனது வயது முதிர்ந்த தாயையும் பார்ப்பதில் உள்ள நிலையையும் எடுத்து கூறியதன் பலனாக எமது பிரதிநிதிகள் நிலையை ஆய்வு செய்து இந்த உதவியை நல்கியிருந்தனர்.
தமது நிலை குறித்து பல்வேறு நிறுவனங்கள், அமைப்புக்களை தொடர்புகொண்டு உதவி கோரியபோதும், எவரும் திரும்பி பார்க்கவும் இல்லை உதவி செய்யவும் இல்லை.
இந்த நிலையில்தான் இந்த உதவியை உமாமகேஸ்வரன் பவுண்டேசனிடம் கோரியிருந்தோம் அவர்கள் எமது நிலமையை உணர்ந்து செய்த உதவி மிகப்பெரியது என்றும் தெரிவித்துள்ளனர். இத்துடன் உதவி பெற்று கொண்டதற்கு நன்றி தெரிவித்தும் இதன் மூலம் தமது கல்வி நடவடிக்கைகளிற்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்து அந்த பிள்ளைகள் எழுதி மடலையும் இணைத்திருக்கிறோம்.
இதற்கான நிதியுதவியாக 75.000 ரூபாவினை கனடாவில் வசித்துவரும் செல்வி. க.தர்மினி அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கியிருந்தார். கல்வியின் அவசியத்தையும் அதற்கான நிலையையும் இன்னுமொரு மாணவியால் தான் உணரமுடியும் என்பதுபோல் கடல்கடந்தாலும் தேசம் கடந்தாலும் எமது தாயகத்தில் வாழும் தமது சகோதரர்களையும் கல்வியால் உயர்த்தவேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் வழங்கிய உதவி என்பது அளப்பரியது.
நாமும் வாழவேண்டும் ஏனையோரும் வாழவேண்டும் என்ற நல்லசிந்தனையுடன் புலம்பெயர்ந்தும் எமது பிள்ளைகள் வாழ்வது மகிழ்வுக்கும் பாராட்டுக்கும் உரியது. தாயகத்தில் வாடும் உறவுகளை எண்ணி இந்த உதவியை நல்கிய செல்வி.தர்மினி அவர்களிற்கு உதவியை பெற்றுக்கொண்ட பிள்ளைகள் சார்பாகவும் உமாமகேஸ்வரன் பவுண்டேசன் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிப்பதில் எமது நிறுவனம் பெருமிதம் கொள்கின்றது.