2021-06-04

பசியால் வாடிய முதியோருக்கான உலர் உணவு வினியோகத்தில் உமாமகேஸ்வரன் பவுண்டேசன்!

செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட காந்தி நகர், முகத்தான்குளம், கங்கன்குளம்,மயில்முட்டையிட்ட குளம் பகுதிகளில் பசியால் தனிமையில் வாடிய முதயிவர்களிற்கான உலர் உணவுபொதிகள் உமாமகேஸ்வரன் பவுண்டேசனால் இன்று வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்டது. எமது (UF) நிறுவனத்தின் செயலாளரும் செட்டிகுளம் பிரதேச இணைப்பாளருமான திருமதி. ஹென்றி பெரோ ஜஸ்மின் அவர்கள் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இவ் உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டது.
 
யாராது உதவியும் இல்லாமல் தனிமையில் வாடிய இவ் முதியவர்கள் எந்தவொரு உதவியும் இன்றி பசியால் வாடுவதாக எமக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து மேற்படி பகுதிகளிற்கு எமது பிரதிநிதி விஜயம் செய்து நிலைமைகளை அறிந்து அப்பகுதிக்கான கிராம சேவகரிடம் அனுமதி, ஒப்புதல் பெற்று கொண்டதன் அடிப்படையில் நேற்றையதினம் முதியவர்களிற்கான உலர் உணவுபொதிகள் கொடுத்தபோது அந்த முதியவர்கள் உள்ளம்புரித்த நிலையில் எமது பிரதிநிதியை வாழ்த்தியதுடன் எந்தவொரு தரப்பினரும் தமது நிலையை கண்டுகொள்ளாத நிலையில் தம்மை அடையாளம் கண்டு தமக்கு இவ்வுதவிகளை வழங்கியமைக்கு உமாமகேஸ்வரன் பவுண்டேசனுக்கு நன்றி தெரிவித்து கண்ணீருடன் வாழ்த்தியது எம்மை நெகிழவைத்துள்ளது.
 
வடக்கு, கிழக்கு என்று பரவலாக பல்வேறு எமது பணிகள் தொடரும் நிலையில் இந்த முதியவர்களின் நிலை மிகுந்த வேதனையை தோற்றுவித்துள்ளது. நடக்கமுடியாமலும், பார்வையில்லாத நிலையிலும், தமது கடமைகளை தாமே செய்யமுடியாத மிகவும் துயரநிலையில் பசியும் அவர்களை வாட்டிய நிலையில்தான் எமது இந்த உதவிகள் அந்த முதியவர்களை சென்றடைந்தது.
 
வழமைபோன்று இந்த உதவிபொருட்களையும் முதியவர்களிடத்தில் எடுத்து செல்வதற்கு நிதியுதவி வழங்கியது புலம்பெயர்ந்து பிரித்தானியா(லண்டன்) தேசத்தில் வாழ்ந்துவரும் ஒர் சமூக போராளி ஆவார். சமூகவிடியலிற்காக தனது இளமையை தொலைத்த ஆயிரக்கணக்கானவர்களில் இவரும் ஒருவரானாலும் தாயகத்தில் வாடும் எம்மக்களின் நிலையை உணர்ந்து வேதனைப்படுபவர்களில் ஒருவராக உள்ளார்.
 
அவரது இந்த அறப்பணியும் அவரது சமூகத்தின் மீதான ஈடுபாடும் இன்னும் பலரை சிந்திக்க தூண்டியுள்ளபோதும் தனது பெயரை வெளியிட வேண்டாம் என்று விடுத்த அன்புகட்டளைக்கு அமைவாக அவரது பெயரை தவிர்த்துள்ளோம். கடல்கடந்து பல்லாயிரம் மைல்கள் தாண்டி வாழ்ந்தாலும் எம் உறவுகளின் ஏக்கத்துடன் இன்றும் அந்நிய தேசத்தில் வாழ்ந்துவரும் இவ்வாறான கருணை உள்ளங்களை பாராட்டியே ஆகவேண்டும்.
 
அந்தவகையில் இவ் முதியவர்களின் பசியை போக்கிய மாந்தருக்கும் அவர் தம் குடும்பத்திற்கும்,எமது பிரதிநிதி திருமதி. ஹென்றி பெரோ ஜஸ்மின் அவர்களுக்கு தோள்கொடுத்து உதவிய பள்ளி சிறார்களிற்கும் முதியவர்கள் சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களையும் உமாமகேஸ்வரன் பவுண்டேசன் தெரிவித்து கொள்கின்றது.