ஜேர்மன் வாழ் அன்புள்ளங்களின் அனுசரணையில் முல்லை மாவட்ட மாணவிக்கான உமாபுலமை பரிசில்!
கல்வி செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்குடன் உமாமகேஸ்வரன் பவுண்டேசன் தொடர்ச்சியாக உமாபுலமை பரிசில் திட்டத்திற்கு ஊடாக கல்வி செயற்பாடுகளை ஊக்குவித்து வருகின்றது. பொருளாதார மற்றும் குடும்ப சூழ்நிலை, போதிய வருமானமின்மை காரணமாக இன்னல்படும் மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு அந்த மாணவ, மாணவியரின் கல்வி செயற்பாடுகளை எமது நிறுவனம் ஊக்கமளித்து வருகின்றது.
சுய தொழில் வேலைவாய்ப்பு, வாழ்வாதார உதவிகள் என்று பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்ற போதும், கல்வியே முதன்மை பணியாக முன்னெடுத்து வருகின்றோம். எமது இந்த சமூக பணிக்காண பங்காளர்களாக எமது அனுசரணையாளர்களே திகள்கின்றனர்.
அந்த வகையில் இன்றைய தினம் செவ்வாய்கிழமை (21.09.2021)செல்வி. க.நவீனா என்ற மாணவிக்கான உமாபுலமை பரிசில் ஊக்கத்தொகையாக ரூபா 10,000 UF இன் பொருளாளர் திரு.ரவீந்திரன் (ரவி) அவர்களால் வழங்கப்பட்டது, மாணவி செல்வி. நவீனாவின் பல்கலை கழகப் பட்டபடிப்பு பூர்த்தியாகும் வரை உமாபுலமை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த செல்வி. நவீனா கிழக்கு பல்கலைகழகத்தில் கலைப்பீட மாணவியாக இளம்கலை படிப்பை மேற்கொண்டு வருகிறார். இவ் மாணவிக்கான உமாபுலமை பரிசிலுக்கான அனுசரணையை புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசித்துவரும் அன்பர்கள் திரு. ஸ்ரீகாந்தா, திரு.உதயகுமார் (அப்பன்), திரு. சற்குணம் ஆகியோர் வழங்கியுள்ளனர். கல்வியின் அவசியத்தை உணர்ந்து ஆதரவு நல்கிவரும் மேற்படி அன்பர்களிற்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் எம் மாணவ சமூகம் சார்பாக UF நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றது.
பிச்சை எடுத்தாகிலும் கல்வி கற்பாயாக என்கிறது நம் பழந்தமிழ். “கற்கை நன்றே கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!” என்பது நம் மரபு. புறநானூற்றில் ஒரு பாடல் உண்டு, அந்தப் பாடல் கல்வியின் மேன்மைகளையும் கல்வி கற்பதால் ஒருவன் அடையும் பெருமைகளையும் வியந்து பேசுகிறது.
உற்றுழி உதவியும் உறுபொருள்
கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும்!
ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும்
செல்லும்!
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே!
எப்படியாவது பொருள் கொடுத்தாவது கல்வி கற்க வேண்டும். ஏனென்றால் பெற்ற தாய் கூட தன் மக்களுள் கல்வியறிவு நிறைந்த மகனைத் தான் பெரிதும் நேசிப்பாள். ஒரே குடும்பத்தில் பிறந்தவர்களே என்றாலும் மூத்தோனை வருக என வரவேற்காது நிரம்பக் கற்றவன் பின்னால்தான் அரசனும் செல்வான். கீழ்சாதியைச் சேர்ந்தவன் என்று சொல்லப்படுபவன் கூட கல்வி கற்றால் மேல் சாதிக்காரனும் அவனை மதிப்பான்’ என்கிறது இப்பாடல்.
அனைவருக்கும் கட்டாயக் கல்வி வழங்கிவிட்டால் சாதி வேற்றுமை தானே மறைந்துவிடும் என்ற கருத்தோட்டத்திற்கு இந்தப் பாடல் ஓர் ஆதாரம்.