2021-11-01

பெண் தலைமைத்துவ குடும்பத்துக்கான சுயதொழில் ஊக்குவிப்பு!

பெண்களை தலைமைத்துவமாக கொண்டுள்ள குடும்பங்களை ஊக்குவிக்குமாக சுய தொழில் ஊக்குவிப்புகளை எமது நிறுவனமான “உமாமகேஸ்வரன் பவுண்டேசன்” முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் வடமராட்சியின் நெல்லியடி பகுதியில் வசித்துவரும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு சுயதொழில் ஊக்குவிப்பாக தைய்யல் இயந்திரம் வழங்கப்பட்டது.
 
நெல்லியடி மகாத்மா வீதியில் வசித்துவரும் திருமதி. அருட்பிரகாசம் நகுலேஸ்வரி என்பவர் மூன்று பிள்ளைகளுடன் மிகவும் இயலாத நிலையிலும் தினசரி சமையல் வேலைக்கு சென்றே பிள்ளைகளைகவனித்து வருகின்றார். தந்தையின் இழப்பின் பின்னர் தாயின் அவல நிலையையும் குடும்பத்தின் ஏழ்மை நிலையையும் கவனத்தில் கொண்ட மூத்தமகள் குடும்ப பொறுப்பை ஏற்று அன்னைக்கு ஆறுதல் கொடுக்க வேண்டும் என்று எண்ணி தனது படிப்பை இடையில் நிறுத்தி,தைய்யல் கற்கையை முறையாக கற்று பூர்த்தி செய்து வருகின்ற நிலையில் தைய்யல் இயந்திரம் ஒன்றினை வாங்கிதருமாறு எமது நிறுவனத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக சுயதொழில் ஊக்குவிப்பாக UF இன் யாழ் மாவட்ட இணைப்பாளர் திரு. சிவம் அவர்களால் இன்றையதினம் திங்கள்கிழமை(01.11.2021)வழங்கப்பட்டது.
 
ஏழ்மை நிலையிலும் பிள்ளைகளை கற்பிக்க வேண்டும் என்ற தாயின் ஏக்கமும், தான் படிக்காவிட்டாலும் சகோதரங்களை படிக்க வேண்டும் என்று பொறுப்புள்ள சகோதரியின் கனவினை நனவாக்க சிறு உதவியாக தைய்யல் இயந்திரத்தை UF வழங்கி நம்பிக்கை எனும் ஒளியை ஏற்படுத்தியுள்ளது.
இவ் குடும்பத்தை சேர்ந்த மேலும் ஒரு மகள் க.பொ. த. உயர்தரத்தில்(A/L)நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்திலும், மகன் க.பொ.த. சாதரணதரத்தில்(O/L)நெல்லியடி திரு இருதயக் கல்லூரியிலும் கல்வியை தொடர்ந்து வருகின்றனர்.
 
எமது நிறுவனத்தினால் கல்விக்காகவும், பொருளாதார மேம்பாட்டிற்கான சுயதொழில் ஊக்குவிப்பாக பல்வேறு ஊக்குவிப்புகளை “உமாமகேஸ்வரன் பவுண்டேசன்”வடகிழக்கு தாயகம் எங்கும் புலம் பெயர் உறவுகளின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றது.
அதன் ஓர் அங்கமாக இவ் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கான சுய தொழில் ஊக்குவிப்பாக 72,000 ரூபா பெறுமதியான தைய்யல் இயந்திரத்தை கனடாவில் வசிக்கும் செல்வி. க. தமிழினி அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கியிருந்தார். மேலும் அவர்களின் உயர்கல்வி வளர்ச்சிக்காகவும் தனது உதவிகள் தொடரும் என்பதையும் தெரிவித்துள்ளார். இவ் உதவியை நல்கிய செல்வி தமிழினிக்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் எமது நிறுவனத்தின் (UF)சார்பாகவும், உதவியை பெற்றுக்கொண்ட குடும்பத்தின் சார்பிலும் நன்றியையும், வாழ்த்துக்களையும் UFதெரிவித்து கொள்கின்றது.
 
‘‘செஞ்ச உதவியும் இட்டுவைத்த விதையும் வீணாகப்போகாது’’
என்ற முதுமொழி தெளிவுறுத்துகிறது. பலன் கிடைத்தாலும், கிடைக்காதிருந்தாலும் நாம் பிறருக்கு எவ்வகையிலாவது உதவுதல் வேண்டும். உதவுவதை வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கைக்கொண்டு மனிதன் வாழ வேண்டும் என்ற வாழ்வியலறத்தையும் மேற்குறித்த பழமொழி வலியுறுத்துகின்றது.